காசி தமிழ் சங்கமத்தின் வாயிலாகத் தமிழ் கற்பதற்காக உத்தரப் பிரதேசத்தில் இருந்து 300 மாணவர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையில் பல்லாயிரம் ஆண்டுப் பிணைப்பு உள்ளது. கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ரீதியிலான இந்தப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதன் 4.0 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், வடமாநில மாணவ மாணவிகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கும் நோக்கில், “தமிழ் கற்கலாம்” என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக 10 நாட்கள் கல்விச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, உணவு முறைகள் உள்ளிட்டவை குறித்து வடமாநில மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்படவுள்ளன. அத்துடன், தமிழகத்தின் தொன்மைவாய்ந்த கலைகள் குறித்தும், சிறப்புமிக்க கோயில்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளன.
இந்த “தமிழ் கற்கலாம்” சுற்றுலா டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து 300 மாணவ மாணவிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருவதாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் சுதா சேசைய்யன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி, கலாச்சாரம் தொடங்கி உணவு முறைகள் வரை நேரடியாக அறிந்துகொள்ள மாணவர்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம், உத்தரபிரதேசத்தில் இருந்து வருகை தந்துள்ள மாணவர்களும் தமிழ் பண்பாட்டை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கிய இடங்களை பார்வையிட ஆவலுடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் கற்கலாம்” என்ற இந்த சுற்றுலா ராமேஸ்வரம் பகுதியில் நிறைவுப்பெறவுள்ளது. இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















