ஆரவல்லி மலைத்தொடர் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த வரையறைக்குச் சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த அதிருப்திக்கு காரணம் என்ன? இதுகுறித்து மத்திய அரசு என்ன கூறுகிறது?.. பார்க்கலாம், இந்தச் செய்தி தொகுப்பில்.
உலகின் மிகவும் பழமையான மடிப்பு மலைத்தொடர்களில் ஒன்று, ஆரவல்லி மலை. இது இமயமலையை விடவும் பழமையானது. வடமேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் சுமார் 800 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மலைத்தொடர் நீண்டுள்ளது. பனாஸ், லூனி, சாகர்மதி போன்ற பல நதிகளின் பிறப்பிடமாகத் திகழும் இந்த மலை, தாமிரம், துத்தநாகம், ஈயம், பளிங்கு கற்கள் போன்ற பல வளங்களையும் கொண்டுள்ளது.
தார் பாலைவனம் கிழக்கு நோக்கிப் பரவாமல் தடுப்பதும் இந்த ஆரவல்லி மலைதான். அத்துடன், காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்துவதிலும், நிலத்தடி நீரை பெருமளவில் சேமிப்பதிலும் இந்த மலை முக்கிய பங்காற்றுகிறது. இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதால் ஆரவல்லி மலைத்தொடர், வடஇந்தியாவின் பச்சை கவசம் என வர்ணிக்கப்படுகிறது. இந்த மலைகுறித்து அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்த வரையறை தற்போது முக்கிய பேசுப்பொருளாகியுள்ளது.
100 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள மலைகள் மட்டும்தான் ஆரவல்லி மலைகளாகக் கருதப்படும் எனக் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இது சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஆரவல்லி மலைத்தொடரில் 100 மீட்டர் உயரத்திற்கும் குறைவான பல பகுதிகள் உள்ளன. புதிய வரையறை காரணமாக அவை சாதாரண மலைகளாகக் கருதப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உயரம் குறைந்த பகுதிகளுக்கான பாதுகாப்பு விலக்கிகொள்ளப்படும் பட்சத்தில், அங்கு அதிகளவில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு கனிமவளங்கள் கண்மூடித்தனமாக வெட்டி எடுக்கப்படும் அபாயம் உருவாகும் எனச் சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழில் அங்கு வேகமெடுக்க தொடங்கிவிடும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். அவ்வாறு நிகழ்ந்தால், அங்கு வாழும் அரியவகை உயிரினங்கள் இறக்கும் சூழல் உருவாவதுடன், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் Aravalli Bachao அமைப்பைச் சேர்ந்தவரும், திரைப்பட தயாரிப்பாளருமான சந்திரமௌலி பாசு, இது ஒரு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் எனக் கூறியுள்ளார். அத்துடன், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகள் இனி வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, #SaveAravalli என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த அச்சங்கள் தேவையற்றவை என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். ஆரவல்லி மலைத்தொடரில் 90% பாதுகாக்கப்பட்ட பகுதிகள்தான் எனவும், விரிவான மேலாண்மை திட்டம் இறுதி செய்யப்படும் வரை புதிய சுரங்க ஒப்பந்தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே சமயம், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, ஆரவல்லி மலை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர்.
















