சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு மஞ்சள் விளைச்சல் அமோகமாக இருந்தும், விலை சரிவால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசே தாங்கள் விளைவித்த மஞ்சளுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழர்களின் முக்கிய பண்டிகையான தைப் பொங்கல் திருவிழா வரும் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், வழிபாட்டுக்கும், சமையலுக்கும், மருந்து தயாரிப்புகளுக்கும் பயன்படும் மஞ்சளின் தேவை அதிகரித்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.
குறிப்பாகச் சர்க்கரை செட்டிப்பட்டி, தின்னப்பட்டி, சின்னத்திருப்பதி, முத்துநாயக்கன்பட்டி, டேனிஷ்பேட்டை, கணவாய்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் விளையும் மஞ்சள், தரத்தில் சிறந்ததாக இருப்பதால் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அவை விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த ஆண்டு சருகு நோய் தாக்குதல் மற்றும் சாகுபடி செலவு அதிகமானபோதிலும், மஞ்சள் விளைச்சல் சிறப்பாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனினும், செலவுக்கேற்றவாறு விலை கிடைக்காமல் இருப்பதால், தங்களுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஆண்டின் தொடக்கத்தில் வியாபாரிகள் விவசாய தோட்டங்களுக்கு நேரடியாகச் சென்று தரத்திற்கேற்ப மஞ்சளின் விலையை நிர்ணயம் செய்து முன்பணம் வழங்குவது வாடிக்கை. விவசாயிகளும் அதற்கேற்றார்போல் மஞ்சளை அறுவடை செய்து, அவர்கள் சொன்ன இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
அப்படியிருக்க இந்த ஆண்டு வியாபாரிகள் வருகை வெகுவாகக் குறைவாகவும், மஞ்சளுக்கு நிர்ணயிக்கப்படும் விலை கடுமையாகச் சரிந்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உற்பத்தி செலவு அதிகரித்த நிலையில் உரிய விலை கிடைக்காவிட்டால் தங்களால் விவசாயம் தொடர முடியாத சூழல் உருவாகும் எனத் தெரிவிக்கும் விவசாயிகள், நஷ்டத்தைத் தவிர்க்க மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மொத்தத்தில் நடப்பாண்டு மஞ்சள் விளைச்சல் அமோகமாக உள்ள போதிலும், விலை சரிவால் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் அவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காண அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
















