உண்மை கண்டறிவதாகக் கூறி, போலிச் செய்தி பரப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
Alt News என்கிற பெயரில் உண்மை கண்டறியும் இணையதள செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இணை நிறுவனர் முகமது ஜுபைர். இவர், தன்னைத் தானே உண்மை கண்டறிபவர் என்று கூறிக்கொண்டு, போலியான செய்திகளை பரப்பி வருவதாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உண்டு.
காரணம், அச்செய்திகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க. அரசுக்கு எதிரானதாகவும் இருக்கும். அதாவது, இஸ்லாமியர்களால் இந்துக்கள் பாதிக்கப்பட்டாலும், இந்துக்களால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டாலும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே இவரது உண்மை கண்டறியும் பதிவு இருக்கும்.
அப்படித்தான், சி.ஏ.ஏ. தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தின்போது இந்துக்கள்தான் கலவரத்தை தூண்டியதாக தனது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டதோடு, தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க.வின் நுபுர் ஷர்மா, நபிகள் நாயகத்தைப் பற்றி பேசியதை மட்டும் வெட்டி ஒட்டி, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியவர் இவர்தான்.
இந்த விவகாரத்தில் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தவிர, முகமது ஜுபைர் மீது வேறு சில வழக்குகளும் உள்ளன. தனது இணையதள விரிவாக்கத்துக்காக இவர் வெளிநாடுகளில் இருக்கும் நபர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.
இந்த நிலையில்தான், முகமது ஜுபைர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ‘கௌரக்ஷா பஜ்ரங் படை’யின் தலைவர் பிட்டு பஜ்ரங்கி. இவரது சகோதரர் மகேஷ் பஞ்சால்.
இவர் கடந்த 13-ம் தேதி தனது கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிலர் மகேஷ் பஞ்சாலை கடுமையாகத் தாக்கியதோடு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகேஷ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நிலைமை இப்படி இருக்க, மகேஷ் பஞ்சால் தவறுதலாக நெருப்பில் விழுத்து தீக்காயமடைந்ததாகவும், அவரைத் தாக்கியதற்கான எந்த ஆதாரமும், தடயமும் இல்லை என்று ஃபரிதாபாத் போலீஸார் கூறியதாகவும் போலிச் செய்தியை பரப்பி இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த பிட்டு பஜ்ரங்கி, ஃபரிதாபாத் போலீஸில் முகமது ஜுபைர் மீது புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில், முகமது ஜுபைர் ஒரு அடிப்படைவாதி மற்றும் தீவிர வகுப்புவாதி. போலி செய்தித் தொழிற்சாலை நடத்துகிறார். ஆகவே, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிக் கொல்லவும் முகமது ஜுபைர் திட்டமிடப்பட்ட சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கும் பிட்டு பஜ்ரங்கி, ஏற்கெனவே இவர் வெளியிட்ட போலிச் செய்திகளையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இதுகுறித்து ஃபரீதாபாத் போலீஸார் முகமது ஜுபைர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.