வெளிநாட்டில் வேலை என்று ஆசை காட்டி, இந்திய இளைஞர்களைச் சட்டவிரோத ஆன் லைன் மோசடிகளில் ஈடுபடுத்தி வரும் ‘ சீன மாஃபியா’ கும்பல் பற்றி அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு…!
லாவோஸ் ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். மொத்தம் 7.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டின் தலைநகரமாக வியன்டியன் விளங்குகிறது. இயற்கை அழகு மிக்க, இந்நாட்டுக்கு வடமேற்கில் சீனாவும் , மியன்மாரும் கிழக்கில் வியட்நாமும் ; தெற்கில் கம்போடியாவும்; மேற்கில் தாய்லாந்தும் எல்லைகளாக இருக்கின்றன.
லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் பொதுச் செயலாளரான ( Thongloun Sisoulith )தோங்லோன் சிசோலித் ஜனவரி 2021 ஆண்டில் இருந்து நாட்டின் தலைவராக இருந்து வருகிறார். 90 சதவீதம் விவசாயத்தை நம்பி இருக்கும் இந்த லாவோஸ் தான் இப்போது சீன மாஃபியா கும்பலின் பிரதேசமாக மாறி இருக்கிறது.
லாவோஸ், கம்போடியா மற்றும் கோல்டன் ட்ரையங்கிள் GOLDEN TRIANGLE என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தான் இந்த சீன மாஃபியாவின் சட்டவிரோத குற்றங்கள் நடக்கின்றன.
கடந்த வாரம் , இந்த மோசடிக்கு ஆள் சேர்க்கும் போலி முகவர்களுக்கு எதிராக இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள் உட்பட ஏழு மாநிலங்களில் மொத்தம் 15 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினரால் தீவிர சோதனைகள் நடத்தப் பட்டன. இந்த சோதனையின் முடிவில்,மனித கடத்தல்,மற்றும் இணைய மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், குஜராத், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் வதோதராவைச் சேர்ந்த மணீஷ் ஹிங்கு, கோபால்கஞ்சைச் சேர்ந்த பஹ்லாத் சிங், டெல்லியைச் சேர்ந்த நபியாலம்ரே, ஹரியானாவை சேர்ந்த பல்வந்த் கட்டாரியா என்ற பாபி கட்டாரியா மற்றும் சண்டிகரைச் சேர்ந்த சர்தாஜ் சிங் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பிரபல யூ ட்யூபரான பாபி கட்டாரியா, எம்பிகே குளோபல் கன்சல்டன்சி என்ற ஆலோசனை சேவை நிறுவனம் நடத்தி வந்திருக்கிறார். உத்தரபிரதேசத்தின் ஃபதேபூரைச் சேர்ந்த இருவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி, ஒரு நபருக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பதிலாக, லாவோஸுக்கு அனுப்பப்பட்டதும் லாவோஸில் மக்களை ஏமாற்றும் போலி அழைப்பு மையத்தில் மூன்று நாட்கள் வேலை செய்ய கட்டாயப்பட்டதும் தெரிய வந்துள்ளது. அந்த இருவரும் சீன மாஃபியா கும்பலிடமிருந்து தப்பித்து லாவோஸில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக பத்திரமாக நாடு திரும்பி இருக்கின்றனர்.
இந்த பாபி கட்டாரியா மீது 2022 ஆம் ஆண்டில், விமானத்தில் புகைபிடித்ததாகவும், பொது இடத்தில் மது அருந்திவிட்டு தகராறு செய்ததாகவும், ஒரு பெண்ணை அடித்ததாகவும் , சமூக ஊடகங்களில் அந்த பெண்ணைப் பற்றி இழிவான கருத்துக்களைப் பகிர்ந்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பல வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்ட இந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த சீன மாஃபியா எப்படி இயங்குகிறது என்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய இளைஞர்களை நல்ல சம்பளத்தில் தாய்லாந்தில் வேலை என்று அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆனால் லாவோஸில் சீன மாஃபியா போலி கால் சென்டர்களில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கே, கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக ஒரு நாளைக்கு இடைவிடாமல் 15 முதல் 20 மணிநேரம் வரை வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள்.
அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்டு மக்களிடம் கிரெடிட் கார்டு மோசடிகள் , கிரிப்டோகரன்சி மோசடிகள் மற்றும் ஹனி ட்ராப்பிங் போன்ற சட்டவிரோத ஆன்லைன் செயல்பாடுகளில் இந்திய இளைஞர்களை சீன மாஃபியா கும்பல் ஈடுபடுத்துவது தெரியவந்துள்ளது.
தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து லாவோஸுக்கு இந்திய இளைஞர்களைக் கடத்துவதற்கு வசதியாக சர்வதேச கடத்தல்காரர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
இந்த சதி நடவடிக்கைகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் குறிப்பிடத்தக்க பல்வேறு குழுவினரால் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இளைஞர்களைக் கடத்தும் பல குழுக்கள் இந்திய மாநிலங்களிலும், ஐக்கிய அரபு அமீரகம், கம்போடியா, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளிலும் சட்டவிரோதமாக செயல்படுகின்றன.
இதற்காக, போலி முகவர்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கின்றனர் என்று NIA விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை, லாவோஸில் இருந்து 13 இந்தியர்களை லோவாஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அட்டாபியு என்னும் மாகாணத்தில் உள்ள ஒரு மரத் தொழில் சாலையில் இருந்து ஏழு ஓடிசா தொழிலாளர்கள் உட்பட 13 இந்தியர்களையும் ,லாவோஸின் போக்கியோ மாகாணத்தின் கோல்டன் டிரையாங்கில் என்னும் சிறப்பு பொருளாதார மணடலத்தில் 6 இந்திய இளைஞர்களையும் வெற்றிகரமாக மீட்டிருப்பதாக லாவோஸில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 428 இந்தியர்கள் லாவோஸில் இருந்து இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய இளைஞர்களைக் குறிவைக்கும் சீன மாஃபியா கும்பலின் பின்னணியில் இருப்பவர்களை தேடும் பணியை தீவிரமாக்கி இருக்கிறது NIA. மேலும் பல கைது நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய இளைஞர்கள், வெளிநாட்டு வேலை ஆசையில் இப்படி போலி முகவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.