MODI 3.0 ஆட்சிக் காலத்தில், NRI முதலீடுகளை ஈர்க்கும் வகையில், விக்சித் பாரத் மற்றும் வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தம் என்று வெளிநாடு வாழ் இந்திய முதலீட்டாளர்களுக்கு இந்திய வணிகச் சந்தையில் பல புதிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.
2026ம் ஆண்டுக்குள் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி , உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவாகும் என்றும், 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி, 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்து மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவாகும் என்றும் உலக வங்கி உட்பட பலரும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில், வணிகம் செய்வதற்கும், செய்யும் வணிகத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்கும் ஏற்ற நாடாக இந்தியா உருவாகி இருக்கிறது.
அதாவது, பிரதமர் மோடியின் முதல் இரண்டு கால ஆட்சியில், இந்தியாவின் வணிகச் சந்தை 10.9 சதவீத லாபத்தை ஈட்டியிருக்கிறது. ஆனால் அதே 10 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவின் வணிகச் சந்தை முறையே 6 சதவீதம் மற்றும் 2.7 சதவீதம் அளவில்தான் லாபத்தைத் தந்திருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், இந்திய வணிகச் சந்தை 18.8 சதவீத லாபத்தைத் தந்த நிலையில், அமெரிக்கா வெறும் 7.6 சதவீத லாபத்தை மட்டுமே வழங்கியிருக்கிறது.
வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக, இந்திய வணிக சந்தை உள்ளது என்பதை, அண்மையில் வெளிவந்த Morgan Stanley மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.
லாபம் இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய முன்வருவார்கள் என்பதால், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, Goods and Services Tax (GST), the Insolvency and Bankruptcy Code (IBC) போன்ற பல பொருளாதார சீர்திருத்தங்களை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
மேலும், வணிக நிறுவனங்களின் சொத்து பரிவர்த்தனைகள், நிதி முதலீடுகள் மற்றும் வணிக வரி தாக்கல் தொடர்பான சட்டங்கள் எல்லாம் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே தான், உலக வங்கியின் எளிதாக தொழில் செய்யக்கூடிய நாடுகளின் தரவரிசையில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வின் பின்னணியில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, அயல்நாடு வாழ் இந்தியர்கள் உலகளாவிய தளத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளன. இந்தக் கொள்கைகள் என்ஆர்ஐகளுக்கு பங்கேற்பதற்கும், ஒத்துழைப்பதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் பல்வேறு வழிகளை வழங்கியுள்ளன.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மிகவும் முக்கியம். பாரத்மாலா திட்டம், ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன், தேசிய நெடுஞ்சாலைகளின் விரிவாக்கம் போன்ற முக்கிய திட்டங்கள் மூலமாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே NRI இந்த துறைகளில் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் வணிகம் நடத்தப்படும் விதத்தில் ஒரு புரட்சியை பிரதமர் மோடியின் ஆட்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக புதிய புதிய ஸ்டார்ட் அப் துறைகளிலும் NRI முதலீடுகள் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
₹ 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டுள்ள “பிஎம் சூர்யோதயா யோஜனா 2024” திட்டத்தின் மூலம் , எரிசக்தி மற்றும் மின்ஆற்றல் துறைகளில் NRI அதிகமாக முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவில் NRI மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் GIFT சிட்டி திட்டம் ஆகும். இதனால் ஏராளமான வாய்ப்புகள் NRI முதலீட்டாளர்களுக்கு உருவாகும் என்று தெரிவிக்கிறார்கள்.
விக்சித் பாரத், இந்திய சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவையும் மேம்படுத்துவதற்கான திட்டமாகும். மேலும், கல்வி முறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான தேசிய கல்விக் கொள்கை என்ஆர்ஐ மாணவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு , புதிய அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தோ-பசிபிக் ஒத்துழைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாலும் , ASEAN மற்றும் BIMSTEC போன்ற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாலும் 15,00,000க்கும் அதிகமான NRIகள் வசிக்கும் ஜப்பான், கொரியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு முதலீடுகள் வர வாய்ப்பிருக்கிறது.
வங்கதேசம், தைவான், திபெத், மொரிசியஸ், இலங்கை, சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளுடன் அதிகரித்து வரும் இந்தியாவின் நல்லுறவு, வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில் நுட்பம், நிதி மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் அதிக வாய்ப்புகளை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுவரும் பொருளாதார நல்லுறவுகள், அந்நாடுகளிலிருந்தும் பெரிய முதலீடுகளை ஈர்க்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி, பலவழிகளிலும் MODI 3.0 அரசு, உலகளவில் NRI களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறது.
மேலும், NRI முதலீட்டாளர்களுக்கு, இந்தியா ஒரு நிலையான மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீட்டுச் சூழலாக அமைந்திருக்கிறது.
2024 நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாகி உள்ளது. ஒரு நாட்டின் ஜிடிபி வளர்ச்சியே , அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா அபரிதமான வளர்ச்சியில் முன்னேறுகிறது என்று உலகமே பாராட்டுகிறது