ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் தங்க விசா சூப்பர் 30 திட்டத்தின் நிறுவனர் ஆனந்த் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் தன் நாட்டில் சிறந்த முதலீட்டாளர்கள், பிசினஸ்மேன்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய வகையிலான தங்க விசாக்களை வழங்குகிறது.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டோருக்கு இந்த தங்க விசா வழங்கப்பட்டது.
அந்த வகையில் தற்போது சூப்பர் 30 திட்டத்தின் நிறுவனர் ஆனந்த் குமாருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தால் கோல்டன் விசாவிற்கு குமார் பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு இந்த தங்க விசா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஆனந்த், “கோல்டன் விசாவைப் பெறுவது ஒரு மரியாதை. இதற்காக நான் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
கணிதவியலாளர் ஆனந்த் குமார், தனது சூப்பர் 30 திட்டத்தை 2002 ஆம் ஆண்டு பாட்னாவில் தொடங்கினார். இது இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான (ஐஐடி) நுழைவுத் தேர்வான ஜேஇஇ-மெயின் மற்றும் ஜேஇஇ-அட்வான்ஸ்டுக்கு பின்தங்கிய மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக தொடங்கப்பட்டது.