எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன்பும் கணபதியை வணங்கி விட்டுத் தொடங்கவேண்டும் என்பது நம் பாரதப் பண்பாடு. எழுதத் தொடங்கும் போது கூட, பிள்ளையார் சுழி போட்டுத் தான் எதையும் தொடங்குவார்கள். இன்றும் இந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது.
விக்கினங்களைத் தீர்ப்பவன் விநாயகனே. விநாயகன் என்றாலே தனக்கு மேலே தன்னை இயக்க ஒரு தலைவன் இல்லாதவன் என்று பொருள், அதாவது விநாயகப் பெருமானே பரம்பொருள், விநாயகனே சிவபெருமான், விநாயகனே இறைவன்.
தமிழ் இலக்கியங்களில் கூட, விநாயகப் பெருமானை, இறைவன் என்றே சொல்லி இருக்கின்றன. விநாயகர் வணக்கமாக காப்புச் செய்யுள் இல்லாமல் பெரும்பாலும் எந்த தமிழ் இலக்கியங்கள் இருப்பதில்லை.
ரிக் வேதத்தில் தொடங்கி வேத, ஆகம, உபநிடத, புறங்களில் பல இடங்களில் கணபதியைப் பற்றிய குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன.
சங்க இலக்கிய நூலான பரிபாடலில் விநாயகனை ஐங்கர மைந்த என்றே சொல்லுகிறது. திருமுருகாற்றுப் படை நூலில் வரும் வெண்பா ஒன்று முருகனை ஒருகை முகன் தம்பியே என்று அழைக்கிறது. திருமந்திரத்தில் வரும் காப்புச் செய்யுள்,
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே, என்று கணபதியை வாழ்த்துகிறது.
கணங்களுக்கு தலைவர் எனவே கணபதி, ஐந்து கரங்கள் உடையவர் அதனால் ஐங்கரன், ஆனை முகம் உடையவர் ஆகவே ஆனைமுகத்தோன், பெரிய வயிறு உடையவர் ஆதலால் மகோதரன், விக்கினங்களைத் தீர்ப்பவர் ஆகவே விக்னேஸ்வரர், இப்படி பற்பல திருப்பெயர்களால் கணபதி போற்றப்படுகிறார்.
விநாயகர் சிகப்பு நிறம் உடையவர் என்று வடமொழி நூல்கள் காட்டினாலும், தமிழில் அவ்வை நீல நிறம் உடையவர் கணபதி என்றே சொல்கிறார். விநாயகனே ஓங்கார வடிவம். இவரை வணங்கினால் கலை, குணம் எல்லாம் கஷ்டப்பட்டுக் கற்க வேண்டிய அவசியமில்லை என்று சைவ சாஸ்திர நூல்களில் ஒன்றான உமாபதி சிவம் அருளிய திருவருட்பயன் என்னும் நூல் அறிவுறுத்துகிறது.
அந்தக் விநாயகர் வணக்கம் ‘நற் குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்கும் சரக்கன்று காண்’ என்கிறது.
ஔவையார் விநாயகரிடம் போய் நான் உனக்கு நான்கு பொருட்களைத் தருகிறேன், நீ எனக்கு மூன்று பொருட்களைத் தா எனக் கட்டளை இடுகிறார். பால், தேன், வெல்லப் பாகு, பருப்பு, என ஔவையார் நான்குப் பொருட்களைத் தருவதாக சொல்கிறார். அதற்கு பதிலாக சங்கத் தமிழ் மூன்றினையும் விநாயகரிடம் தமக்குச் தரச் சொல்கிறார்.
என்ன பொருள் என்றால்? பால் குழந்தை பருவம், தேன் விடலை பருவம், பாகுவாலிப பருவம், பருப்பு முதுமை பருவம், தனது வாழ்நாள் முழுவதும் உனக்குத் தருகிறேன் விநாயகப் பெருமானே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றினையும் மட்டும் தா என ஔவையார் வேண்டுகின்றார்.
நாமும் இதையே அந்தப் பெருமானிடம் வேண்டி வரம் பெறுவோம்.