மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (ஜூலை 25) கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 25, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சிஸாகவும் இருக்கக்கூடும்.