இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் (20.07.2023) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஷ்வாலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடக்கத்திலே வெளிப்படுத்தினர்.
இதில் ரோகித் சர்மா 143 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 80 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 74 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் ஆட்டமிழந்தார். ஆனால் அதற்கு பிறகு சிறப்பாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அடுத்த 13 ரன்னில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, அதற்கு பிறகு விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து 150 ரன்கள் எடுத்து அசத்தினர். இவர்கள் இருவரும்டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த இந்திய ஜோடிகள் பட்டியலில் 66.73 சராசரியோடு 3வது இடத்தில் உள்ளனர்.
வெளிநாட்டில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி தனது அடித்த முதல் சதம் இது என்பதும், இது கோலியின் 500-வது சர்வதேச போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்து முத்திரைப்பதித்த முதல் வீரர் என்ற பெருமை விராட் கோலி பெற்றுள்ளார். அதனடிப்படையில் டெஸ்டில் 29-வது சத்தத்தை அடித்த விராட் கோலி, டெஸ்டில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 16-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை சமன் செய்துள்ளார்.
விராட் கோலி 121 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது 76-வது சதத்தை பதிவுசெய்தார். இதன் மூலம் அதிக சர்வதேச சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்கள் முன்னிலை பெற்று அணியை டிக்ளேர் செய்தது.
வெற்றிபெற இன்னும் 289 ரன்கள் தேவை என்ற நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் தொடங்கியநிலையில், கனமழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடைவிடாமல் மழை பெய்ததால், ஐந்தாம் நாள் ஆட்டமான போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.