நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கி வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்த பாஜக நாடாளுமன்றக் குழு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடியது.
இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில்,
இந்திய தேசிய காங்கிரஸ், நாட்டை அடிமைப்படுத்திய கிழக்கு இந்திய கம்பெனி, பயங்கரவாத அமைப்புகளான இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புகளிலும் இந்தியா பெயர் உள்ளது. பெயரில் இந்தியா என்ற வார்த்தையை கொண்டு வருவதால் எதுவும் நடந்துவிடாது.
தோல்வியடைந்த, நம்பிக்கையற்ற, திசையற்ற, ஓய்ந்து போன, மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை திட்டத்தை மட்டும் கொண்டுள்ள கூட்டணியாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளது. இதை போன்ற கூட்டணியை முன்னர் நான் பார்த்தது கிடையாது. இந்த கட்சிகள் விவாதத்தில் இருந்து நழுவுகின்றன.
‘கிழக்கு இந்தியா’ கம்பெனி போல் மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புகின்றன. இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றன. நாட்டின் பெயரை வைப்பதால் மட்டும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது.
“எதிர்க்கட்சிகளின் நடத்தை வரும் ஆண்டுகளில் நிரந்தரமாக எதிர்க்கட்சியில் இருக்க முடிவு செய்திருப்பதைக் காட்டுகிறது.
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்றும், இந்தத் தீர்மானத்துடன் நாம் முன்னேறி, இந்தக் கனவோடு வாழ வேண்டும் என்று கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 25 ஆண்டு காலம் குறித்தும் பேசிய பிரதமர் மோடி, கூட்டணியை முன்னோக்கி கொண்டு செல்ல அழைப்பு விடுத்தார் என்று ஜோஷி கூறினார்.2014 ஆம் ஆண்டில், உலகளவில் பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்தோம், இரண்டாவது ஆண்டில், 5 வது இடத்தை அடைந்தோம், மேலும் எங்கள் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று ஜோஷி மேலும் கூறினார்.