2022 ஜூலை ஒன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும்பருவநிலை மாற்ற அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகள், 2021 ஐ 12 ஆகஸ்ட் 2021 அன்று அறிவித்தது. இது 2022 ஜூலை 1 முதல் கீழ்க்காணும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்துள்ளது.
(i)பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், தெர்மாகோல்
(ii) தட்டுகள், கோப்பைகள், கண்ணாடிகள், ஃபோர்க்குகள், கரண்டிகள், கத்திகள், உறிஞ்சுகுழல், அழைப்பிதழ் அட்டைகள் சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் 100 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி பேனர்கள்.
2022 டிசம்பர் 31 முதல் நூற்று இருபது மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை இந்த அறிவிப்பு தடைசெய்கிறது.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து மத்திய அரசின் வேதியியல் மற்றும் பெட்ரோ ரசாயன துறையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 2022ஜூலை 1முதல் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் அடையாளம் காணப்பட்டன.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் ஈடுபட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு சுற்றுச்சூழல் மாற்றுகள் குறித்த தேசிய கண்காட்சி மற்றும் ஸ்டார்ட் அப் மாநாடு – 2022 ஆகியவை தமிழக அரசுடன் இணைந்து 2022 செப்டம்பர் 26-27 தேதிகளில் சென்னையில் நடத்தப்பட்டன.
இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் மாற்று பொருட்கள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். தென்னை நார், சக்கை, அரிசி மற்றும் கோதுமை தவிடு, தாவர மற்றும் விவசாய எச்சங்கள், வாழை மற்றும் பாக்கு இலைகள், சணல் மற்றும் துணி ஆகியவற்றிலிருந்து சுற்றுச்சூழல் மாற்றுகள் தயாரிக்கப்பட்டன.