புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கிற்கு எதிரான ஊழல் புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க, தேர்ந்தெடுக்கபட்ட பல்கலைக்கழகங்களில், மனித வள மேம்பாட்டு மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதேபோல, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக போலி ரசீதுகள் தயாரித்து 2 கோடியே 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக மைய இயக்குனர் பேராசிரியர் ஹரிஹரன் மீது புகார் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தன் மீது உள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்கும் வகையில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கிற்கு, 50 லட்சம் ரூபாயை ஹரிஹரன் லஞ்சமாக கொடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், குர்மீத் சிங்கி மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மத்திய புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டும். பொய் ஊழல் புகார்களில் இருந்து அதிகாரிகளைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை, ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்ற சட்டத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.