செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம் என்றும், தாக்கப்பட்டதாகச் சொன்னாரே, காயத்தை காட்டவில்லையே என்றும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி வாதத்தை முன்வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2011 – 16 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் இருவருக்கும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
இதன் பிறகு, செந்தில் பாலாஜி, அவரது தம்பி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் கடந்த மாதம் 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, மறுநாள் அதிகாலை செந்தில் பாலாஜியை கைது செய்து, அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால், தனக்கு நெஞ்சு வலிப்பாக அவர் கூறவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், சிகிச்சை முடிந்து தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நேற்று நிறைவடைந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, 15 நாட்களுக்கு மேல் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், தற்போதுதான் அவர் உடல் நலம் தேறிவருவதால் அவரிடம் சிறிது நேரம் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க, இன்று ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டிருந்தது அமலாக்கத்துறை, அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜி விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்தார். இடையூறுகளை ஏற்படுத்தினார். தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலேயே அவர் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளதால் தற்போது விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை. எனவே, அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள இந்த காலகட்டத்தை முதல் 15 நாட்களாக உச்சநீதிமன்றம் எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறியிருக்கும் நிலையில், நீதிபதிகளிடம் காயத்தை காண்பிக்கவில்லை, ஆகவே, செந்தில் பாலாஜியிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துவது மிக மிக அவசியம்” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவரும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளருமான வீரா. சாமிநாதனின், கொங்கு நகரிலுள்ள வீட்டிலும், முத்துப்பட்டியிலுள்ள தோட்டத்து வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறார்கள். இவர், பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மாமூல் வசூலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.