ஹரியானா மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கும், முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்திருக்கிறது. இச்சம்பவத்தில் நடந்தது ஒன்றாக இருக்க, ஊடகங்கள் வேறு விதமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள நூஹ் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ என்கிற பெயரில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைக் குருகிராம் சிவில் லைன்ஸிலிருந்து பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கி வைத்தார். இப்பேரணி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கக் கூடிய கேத்லா மோட் அருகே சென்றபோது, முஸ்லீம் இளைஞர்கள் கும்பல் ஒன்று பேரணியை தடுத்து நிறுத்தியது. மேலும், பேரணியைத் தொடர விடாமல் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் கைமீறிய நிலையில், கல்வீச்சு, கார் உள்ளிட்ட வாகனங்களுக்குத் தீவைப்பு என பெரும் கலவரமாக வெடித்தது. இதனால், கேத்லா மோட் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை ஒடுக்க முயன்றனர். ஆனால், வன்முறையாளர்கள் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும், காவலர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும், காவல் துறையைச் சேர்ந்த பலரும் படுகாயமடைந்தனர். அதேப்போல, கலவரத்தில் ஈடுபட்ட 4 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்வத்தைத் தொடர்ந்து, நூஹ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்தது. இதனால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, இணைய வசதியும் தடைச் செய்யப்பட்டது. பேரணியில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட 2,500 பேர் அருகிலுள்ள காவல் நிலையங்களிலும், கோயில்களிலும் தஞ்சமடைந்தனர். இந்த விவகாரத்தில் பேரணியாகச் சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை முஸ்லீம் இளைஞர்கள் வழிமறித்து தாக்கியதால்தான் கலவரம் வெடித்தது.
நிலைமை இப்படி இருக்க, கலவரத்தை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர்தான் தூண்டியதுபோல சித்தரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதேபோல, சமூக வலைத்தளங்களிலும் விஷம பிரசாரம் செய்து வருகின்றனர்.
இது இப்படி இருக்க, கலவரம் நூஹ் பகுதியில் மட்டுமின்றி, அருகிலுள்ள குர்கான், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களுக்கும் பரவியது. இதனால் அம்மாவட்டங்களில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும், ஹரியானா கலவரத்தை கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் இன்று டெல்லியில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலைமையை கண்காணிக்க காவல்துறையினர் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரின் போராட்டத்திற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங், “தலைநகர் பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தின் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் வெளியிடப்படுவது கவலையளிக்கிறது” என்று வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேசமயம், பேரணிகளின் போது வெறுப்பூட்டும் பேச்சுக்களோ, வன்முறைகளோ நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மாநில அரசுக்கும், டெல்லி காவல்துறைக்கும் உத்தரவிட்டது. மேலும், வெறுப்பு பேச்சு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதோடு, போதுமான அளவில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அனைத்து விஷயங்களையும் பதிவு செய்ய வேண்டும். பேரணி நடத்துவதாக, வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டதோடு, வகுப்பு வாத கலவரம் விவகாரத்தில் ஹரியானா, டில்லி, உ.பி. ஆகிய 3 மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.