“என் மண் என் மக்கள்” பாதயாத்திரையின் 6-வது நாளான இன்று, “நாடும் நமதே, 40-ம் நமதே” என்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் .
தமிழக பா.ஜ.க.மாநிலத் தலைவரான அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு விளக்கிக் கூறவும், தி.மு.க. அரசின் ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தவும், என் மண் என் மக்கள் என்கிற பெயரில் பாத யாத்திரையைத் தொடங்கி இருக்கிறார். கடந்த 28-ம் தேதி தொடங்கிய இந்த பாத யாத்திரை, தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலும் நடைபெறவிருக்கிறது. 168 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையின் போது சுமார் 1,700 கி.மீ. தூரத்தை அண்ணாமலை பாதயாத்திரையாக கடக்கிறார்.
இந்த பாதயாத்திரையின்போது அண்ணாமலைக்குப் பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகிறார்கள். அந்த வகையில், 6-வது நாளான இன்றும் அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 9-வது தொகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையில் இன்று காலையில் யாத்திரை துவங்கியது. அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை,
“தமிழகம் வளம்பெற 3-வது முறையாக மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வேண்டும். திருமயம் மலைக்கோட்டை மிகவும் பழமையானது. இங்கு ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கானச் சான்று இருக்கிறது. இது திருமயத்தின் சரித்திரத்தை உணர்த்துகிறது.
திருமயம் ஜல்லிக்கட்டுக்கு பெருமை சேர்க்கும் ஊர். காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 2009-ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகுதான் தடை நீக்கப்பட்டது.
ஆகவே, சீறிப்பாயும் ஜல்லிக்கட்டுக் காளையாக திருமயம் இளைஞர்கள் திகழ்கிறார்கள். அதேபோல, தீரன் சத்தியமூர்த்தி பிறந்த ஊரும் இதுதான். அந்த வகையில், திருமயம் தேசியத்தின் பக்கம் நிற்கும் ஊர் என்பது உறுதியாகிறது. திருமயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரகுபதி, சட்டம், ஊழல் தடுப்பு மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருக்கிறார். சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர், சிறைத்துறை அமைச்சராக இருக்கிறார். இதுதான் திராவிட மாடல்.
அதேசமயம், பிரதமரின் முகவரி எது என்றால் எல்லாம் மக்களின் முகவரிதான். அனைவருக்கும் வீடு, வீடுதோறும் கழிப்பறை, அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், பொது சுகாதார ஊட்டச் சத்து என பல்வேறு திட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வருகிறது. ஜல் ஜீவன், பொது சுகாதார ஊட்டச்சத்து திட்டங்களுக்கு மத்திய அரசு 2 லட்சத்து 907 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது. அதேபோல, அனைவருக்கும் கழிப்பறை திட்டத்துக்கு 57 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இதுதான் புதிய இந்தியாவின் அடையாளம். ஆனால், தமிழகம் கடன் வாங்குதில்தான் நம்பர் 1 மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
தி.மு.க. அரசு பதவியேற்ற இந்த இரண்டே கால் வருடத்தில் புதிதாக 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மக்களின் தலையிலும் 3 லட்சத்து 52 ஆயிரம் கடனை ஏற்றி இருக்கிறார்கள். அதேபோல, தமிழகம் குடிகார மாநிலத்திலும் நம்பர் 1 ஆக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 5,500 மதுக்கடைகள் இருக்கின்றன. தற்போது புதிதாக சாஷே பாக்கெட்டிலும் சாராயத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்கள்.
மேலும், வருடத்துக்கு 70 ஆயிரம் பேருக்கு என 5 வருடத்தில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவதாக தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டே கால் வருடமாகியும் இதுவரை 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல். பொய், ஊழல் இதுதான் தி.மு.க.வுக்கு தெரியும். அதேசமயம், 2023-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தற்போதுவரை, 5.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, 2014-ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும்போது, இந்திய குடிமகனின் தனிநபர் வருமானம் 86 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 2023-ம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1 லட்சத்து 82 ஆயிரமாக இருக்கிறது. அந்தளவுக்கு அசாத்தியமான உழைப்பை பிரதமர் மோடி கொடுத்து வருகிறார். தனது 23 வருட முதல்வர், பிரதமர் வாழ்க்கையில் இதுவரை ஒரு நாள்கூட பிரதமர் நரேந்திர மோடி விடுமுறை எடுத்ததில்லை. இதன் காரணமாகவே, உலக பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியாவை 5-வது இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். இதுதான் மோடி மாடல்.
ஆனால், குள்ளநரிக் கூட்டம் ஒன்று இந்தியா என்கிற பெயரில் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள், குடும்ப அரசியல் செய்பவர்கள். எனினும், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்க எந்த நபராலும் முடியாது. இந்த மாவட்டத்தில் ரகுபதி, மெய்யநாதன் என 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களால் உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இந்தியாவில் 400 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். இதில் 40 தொகுதிகளை தமிழகத்திலிருந்து தரவேண்டும், இதற்காகத்தான் இந்த யாத்திரை” என்று அண்ணாமலை கூறியிருக்கிறார் .