குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அவருக்கு மசினக்குடியைச் சேர்ந்த சிறுமி “பேட் ஆஃப் மசினகுடி” என்கிற புத்தகத்தை வழங்கினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழகத்திற்கு 3 நாள் பயணம் வந்துள்ளார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் மைசூர் வந்தடைந்தார். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினக்குடி சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்பு அளித்தனர். பின்னர், கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்குச் சென்றார். அங்கு, தி எலிபென்ட் விஸ்பர்ஸ் ஆவணப்படத்திற்க்காக ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து, பரிசுகளை வழங்கினார்.
பின்னர், முகாமிலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கினார். பிறகு, அங்கிருந்து காரில் புறப்பட்டு மசினகுடி பஜார் அருகே வந்தபோது திடீரென காரிலிருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்து கைக்குலுக்கினார். அப்போது, அனன்யா விஷ்வேஷ் என்ற சிறுமி, குடியரசுத் தலைவருக்கு தான் எழுதிய “பேட் ஆஃப் மசினகுடி” என்ற புத்தகத்தை வழங்கினார். அச்சிறுமிக்கு சாக்லெட் வழங்கிய குடியரசுத் தலைவர், அங்கிருந்த மற்ற சிறுவர் சிறுமிகளுக்கும் சாக்லேட் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விட்டர் பதிவில், “யானைகளை பாதுகாக்க வேண்டியது நமது தேசிய பொறுப்பு. இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் பழங்குடி சமூகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த சமூகங்களுக்கு தங்களது அரசியலமைப்பு உரிமைகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.