உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் 3-வது நாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரே ஞானவாபி மசூதி உள்ளது. இது இந்து கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று நீண்ட காலமாகவே இந்துக்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி கோர்ட் உத்தரவிட்டது. அப்போது, மசூதிக்குள்ளே சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சிவலிங்கத்தின் காலத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்துக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு மசூதி தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், தொல்லியல் துறை ஆய்வுக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையும் எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன்படி, உச்ச நீதிமன்றமும் ஜூலை 26-ம் தேதி வரை ஆய்வு நடத்த தடை விதித்ததோடு, அலகபாத் உயர் நீதிமன்றத்தை நாடும்படி அறிவுறுத்தியது.
மசூதி தரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, தொல்லியல் துறை ஆய்வுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 4-ம் தேதி முதல் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கும் தடைக் கோரி, மசூதி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். ஆனால், தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து, 3-வது நாளாக ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வைத் தொடர்ந்து வருகின்றனர்.