ரஷ்யா – உக்ரைன் இடையே நடக்கும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இதைவிட வேறு எதுவும் இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தராது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது. போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றன. ஆகவே, போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை உலக நாடுகள் ஒருகிணைந்து மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உக்ரைன் போர் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் 40 நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றிருக்கிறார்.
இம்மாநாட்டில் நேற்றைய நிகழ்வின்போது பேசிய அஜித் தோவல், “ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இதைவிட இந்தியாவுக்கு வேறு எதுவும் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்காது. இரு நாடுகளுக்கும் இடையை போர் தொடங்கியதில் இருந்தே இந்தியா உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும், அதன் அண்டை நாடுகளுக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது.
இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் இராஜதந்திரத்தை ஊக்குவிப்பதாகவே இருக்கும். இதுதான் அமைதியை நோக்கி முன்னோக்கிச் செல்லும் வழியாகும். போர் தொடர்பாக பல சமாதான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு விஷயத்தில் சில சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இவை இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஆகவே, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தீர்வுகளை காண வேண்டும். அதற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்” என்று கூறியிருக்கிறார்.