ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்தே, அம்மாநிலத்தில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்ஹல் பகுதியான குந்தா கவாஸ் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், ஜம்மு மாநில போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிர வாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் .
இதுகுறித்து ஜம்மு கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் கூறுகையில், “ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான் ” என்றார்.
முன்னதாக, குல்காம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 இந்திய ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.