அம்ரித் பாரத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “எதிர்மறை அரசியலுக்கு அப்பால் உயர்ந்து, நேர்மறை அரசியல் பாதையில் பயணிக்கிறோம்” என்று எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
நாட்டிலுள்ள இரயில் நிலையங்களில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமாக இருந்து வருகிறது. இதற்காக, அம்ரித் பாரத் ஸ்டேஷன் என்கிற புதிய திட்டத்தைப் பிரதமர் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 1,309 இரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன.
அதற்கு முதல்கட்டமாக, 24,470 கோடி ரூபாய் செலவில் 508 இரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் அரக்கோணம், கரூர், நாகர்கோவில், சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர், ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு உட்பட 18 இரயில் நிலையங்கள் 515 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட உள்ளன.
பாரதப் பிரதமர் மோடி, காணொளி காட்சி வாயிலாக இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பேசுகையில், “வளர்ந்த நாடு என்கிற இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில், இந்திய இரயில்வே வரலாற்றில் அம்ரித் பாரத் திட்டம் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும்.
தற்போது உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் இந்தியா மீதுதான் இருக்கிறது. இந்தியாவின் கவுரவம் உலகளவில் அதிகரித்திருக்கிறது. இதனால், இந்தியாவின் விஷயத்தில் உலகின் அணுகுமுறை மாறி இருக்கிறது. இதற்கு 2 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழு மெஜாரிட்டியிலான அரசை மக்கள் கொண்டு வந்தது. இரண்டாவது, அந்த அரசு நாட்டின் சவால்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் பெரிய முடிவுகளை தொடர்ந்து எடுத்தது.
ஆனால், நம் நாட்டில் எதிர்க்கட்சிகளில் ஒரு பிரிவினர் துரதிர்ஷ்டவசமாக, இன்னும் பழைய முறையையே பின்பற்றுகின்றனர். அவர்கள் தாங்களாக எதையும் செய்ய மாட்டார்கள். வேறு யாரையும் செய்ய விடவும் மாட்டார்கள். நாட்டின் ஜனநாயகத்தின் சின்னம் நாடாளுமன்றம். அதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பிரதிநிதித்துவம் உள்ளது. ஆனால், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை எதிர்க்கட்சியினர் எதிர்த்தனர்.
அதேபோல, நாட்டிற்காக துணிச்சலுடன் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு போர் நினைவுச் சின்னம் கட்டினோம். இதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தார்கள். மேலும், உலகிலேயே மிகவும் உயரமான சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை அமைத்தோம். இதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம். ஆனால், சில அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்கள் யாரும் அச்சிலையை பார்வையிட்டதில்லை. எனினும், எதிர்மறை அரசியலை கடந்து, நாங்கள் நேர்மறையான அரசியல் பாதையில் பயணிக்கிறோம்” என்று கூறினார்.
இந்த அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இரயில் நிலையமும் சிட்டி சென்ட்டர் போல மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இரயில் நிலையமும் சிட்டி சென்டர் போல மேம்படுத்தப்படும். அதன்படி, இரயில் நிலையங்களின் கட்டடம் தரம் உயர்த்தப்படுவதோடு, வணிக மண்டலம், உணவகம், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்படும். மேலும், பயணிகளின் வசதிக்காக தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறும் வாயில், பல அடுக்கு வாகன நிறுத்தமிடம், மின்னூர்தி, நகரும் படிக்கட்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவையும் ஏற்படுத்தப்படும். எனத் தெரிவித்தார் பிரதமர் மோடி.