தமிழக வந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கினார்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று (சனிக்கிழமை) இரவே சென்னை வந்துவிட்டார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கிய அவருக்கு இன்று காலை முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கி உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “தமிழ்நாட்டின் கோயில்கள் கட்டிடக் கலை, சிற்பக்கலை போன்ற மனித குலத்தின் திறமைகளுக்குச் சான்றாக அமைந்துள்ளன. திருக்குறள் பல நூற்றாண்டுகளாக நமது அனைவரது வாழ்வுக்கும் வழிகாட்டியாக உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், சர். சிவி. ராமன், வெங்கட் ராமன், விவி கிரி, நீலம் சஞ்சீவி ரெட்டி, அப்துல் கலாம், உள்ளிட்ட பல தலைவர்களை நமக்கு அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.
சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர், “சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பிராந்தியம், நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் தொட்டிலாக விளங்கி வருகிறது. சங்க கால இலக்கியத்தின் மரபு வழி, இந்தியாவின் மதிப்புமிக்க பாரம்பரியமாகும். திருக்குறளில் பாதுகாக்கப்பட்ட மாபெரும் ஞானம், பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
President Droupadi Murmu addressed the 165th convocation of University of Madras in Chennai. The President said that the University of Madras has been a cradle of learning, producing countless scholars, leaders, and visionaries. https://t.co/Lp342nhqLh pic.twitter.com/XZ1XD79Vhf
— President of India (@rashtrapatibhvn) August 6, 2023
விழாவின்போது தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கும் தரவரிசையில் முதலிடம் பெற்றவர்களுக்கும் பட்டம் மற்றும் பதக்கங்களைக் குடியரசுத் தலைவர் வழங்கினார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 762 பேருக்குப் பட்டமும் வழங்கப்பட்டது. 565 பேருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டிருக்கிறது.