நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்ததோடு, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை அழைத்து வருவதற்காக சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
ஆனால், சிறைத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அனுப்ப மறுத்து தொடர்ந்து இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரவு 8 மணியளவில் சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர். அங்கு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்றிரவு விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையின் இடையே அவ்வப்போது செந்தில் பாலாஜிக்கு ஓய்வும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு முன்னதாக செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் பரிசோதனையும் செய்திருக்கிறார்கள். இன்றும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியிடம் தினசரி அதிகபட்சம் 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து சாஸ்திரிபவனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.