நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் – 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பைக் காணொளியாக எடுத்து அனுப்பி இருக்கிறது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் -2 விண்கலம், நிலாவில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. எனினும், மனம் தளராத இஸ்ரோ விஞ்ஞானிகள் 4 ஆண்டுகள் இடைவிடாத தொடர் முயற்சிக்குப் பிறகு, சந்திராயன் -3 விண்கலத்தை உருவாக்கி கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பினர்.
இந்த விண்கலம் தனது 23 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, கடந்த 5-ம் தேதி இரவு 7 மணியளவில் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. தற்போது, நிலவின் சுற்று வட்டப் பாதையில் பயணித்து வரும் சந்திராயன் -3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்த காணொளியை இஸ்ரோ கட்டுபாட்டு அறைக்கு அனுப்பி இருக்கிறது. இந்தக் காணொளியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த காணொளி பதிவை Retweet செய்து சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் “சந்திரயான்-3 நிலவு நெருங்கும் கட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். என்ன ஒரு சிறந்த புகைப்படம்! ” என்று தெரிவித்தார்.
Big congratulations to the Chandrayaan-3 moon insertion phase. What a great pic ! HC Wong https://t.co/ogeExbXq6r
— Singapore in India (@SGinIndia) August 7, 2023
நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வரும் சந்திரயான் -3 விண்கலம், அதிகபட்சம் 18,072 கிலோ மீட்டர், குறைந்தபட்சம் 114 கிலோ மீட்டர் என்ற அளவில் நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது. இதனுடைய உயரத்தை குறைக்கும் சவாலான பணியில் பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு அதனுடைய உயரத்தை குறைத்து உள்ளனர்.
இதனால், விண்கலம் திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையான முறையில் தரையிறக்கம் செய்ய முயற்சி செய்யப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.