நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர், கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாளில் இருந்தே மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் முடங்கின. என்றாலும், திட்டமிட்டப்படி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த அரசுத் தரப்பில் அழைப்பு விடுத்தனர். ஆனால், எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்புத் தெரிவித்து விட்டன.
இதனிடையே, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள்கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை,ஏற்றுக் கொண்ட மக்களவை தலைவர் ஓம் பிர்லா அதன் மீதான விவாதம் நடத்த நேரம் குறிப்பிட்டிருந்தார்.
இன்று காலை வழக்கம்போல நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. ஆனால், வழக்கம்போல மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சியினர், தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, மாநிலங்களவையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன், நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில், கடும் அமளியில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரைக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார்.