சேலம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இரவு முழுவதும் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர்.
சேலம் நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில், ஆண்டுத் தோறும் ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சொரிதலுடன் தொடங்கும் ஆடித்திருவிழா, வெகு விமர்சையாக கொண்டாடப்படும் . இந்த ஆண்டு கடந்த மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தொடா்ந்து சேலத்தில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் இருந்து பூக்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல், மாவிளக்கு பிராா்த்தனை செலுத்துதல் மிக பிரச்சித்தியான திருவிழா நேற்று இரவு முதல் நடந்தது.
அதன்படி சேலத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழா நடந்தது. குகை மாரியம்மன், காளியம்மன், சேலம் சின்ன மாரியம்மன், தாதாகப்பட்டி மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலபட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், தாதம்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், காமராஜர் காலனி மாரியம்மன் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று சேலம் நகரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.