ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கேரளாவில் பிரசித்தி மிக்க சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறுவது வழக்கம். உழவுத் தொழில் செழிப்படைந்து நாட்டில் வறுமை நீங்கி மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக நடத்தப் படும் இப்பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது .
இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நாளை (10-ந்தேதி) நடக்கிறது. இதற்காக சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
நிறை புத்தரிசி பூஜைக்கான நெற்கதிர் கட்டுகள் அச்சன்கோவிலில் இருந்து இன்று ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது. 51 நெற்கதிர் கட்டுகள், பட்டு வஸ்திரம் சுற்றப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட திரு ஆபரணப்பெட்டி வாகனத்தில் ஏற்றி தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் ஸ்ரீ ஐயப்பப் பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த நெற்கதிர்களுக்கு இன்று மாலை 3 மணியளவில் பம்பை கணபதி கோவிலில் பூஜை செய்யப்படுகிறது. பின்பு விரதமிருந்து வரும் 51 பக்தர்கள் மூலமாக 51 நெற்கதிர் கட்டுக்களுக்கு நிறை புத்தரிசி பூஜை நடத்தப் படுகிறது
ஆவணி மாத பூஜைக்காக வருகிற 16-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படுவதோடு, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் செப்டம்பர் 1-ந்தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.