மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த நிலையில், நீங்கள் இந்தியாவே அல்ல, காங்கிரஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்திருக்கிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான 2-வது நாளான இன்றும் விவாதம் நடந்து வருகிறது.
தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று காலை பேசிய ராகுல் காந்தி, “நான் அதானி பற்றி பேசமாட்டேன். ஆகவே, பா.ஜ.க. நண்பர்கள் பயப்பட வேண்டாம். நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் சென்றிருந்தேன். ஆனால், பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. அப்படியானால், மணிப்பூரை நாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லையா? என்று பேசினார்.
ராகுல் காந்தி பேசிக்கொண்டிருக்கும்போதே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ எழுந்து குறுக்கிட்டு ராகுல் காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுலுக்கு எதிராக குரல் கொடுத்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் கோஷமிட, அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதன் பிறகு பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்தும், பில்வாரா பலாத்காரம் குறித்தும் பேச மறுப்பது ஏன்? அதேபோல, காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த கிரிஜா திக்கு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்தும் ராகுல் பேசாதது ஏன்?
மணிப்பூர் பிளவுபட்டு விட்டதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார். மணிப்பூர் பிளவுபடவில்லை. அது இந்தியாவின் ஒரு பகுதி. அதை இந்தியாவிடமிருந்து ஒருபோதும் பிரித்து விட முடியாது. மணிப்பூரைக் காட்டிலும் காஷ்மீரில் நடந்த இனப்படுகொலை மிகவும் கொடூரமானது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகுதான் பெண்கள் காஷ்மீரில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 1990-களில் காஷ்மீர் பண்டிட்கள் எதிர்கொண்ட கொடுமைகளுக்கு நீதிகேட்டு அவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் இந்தியாவே அல்ல. காரணம், இந்தியா என்பது ஊழல் அல்ல. இந்தியா என்பது உயர் விழுமியங்களைக் கொண்டது. வாரிசு அரசியலைக் கொண்டது அல்ல. ஊழல் பற்றி பேசும்போது, உங்கள் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வை சற்று யோசித்துப் பாருங்கள். ஊழலும், வாரிசு அரசியலும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். ஆகவே, காங்கிரஸ் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்மிருதி இரானி.