இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும், அவரது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மக்மூத் குரேஷி கைது செய்யப்பட்டிருப்பதால் இம்ரான் கானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர், பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாகக் கிடைத்த விலை உயர்ந்த பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல் விற்றுப் பணத்தை மோசடி செய்துவிட்டதாக ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுத் தற்போது சிறையில் இருந்து வருகிறார். எனினும், தோஷகானா வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனை எதிர்த்து இம்ரான் கான் மேல் முறையீடு செய்திருக்கிறார்.
இந்த சூழலில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், தனது ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேச சதி இருப்பதாகக் கூறி, ஒரு கடிதத்தைத் காட்டினார். இதையடுத்து, அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திர கேபிளின் உள்ளடக்கத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக, மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்குத் தொடர்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்டாக் சிறையில் இம்ரான் கானிடம் விசாரணை நடத்திய எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால், இம்ரான் கானுக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இம்ரான் கான் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஷா மக்மூத் குரேஷியை காவல்துறையினர் திடீரென நேற்று கைது செய்திருப்பது சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர் ஷா மகமூத் குரேஷி. அவரது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவராகவும், அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். இம்ரான் கானின் அனைத்து நடவடிக்கைகளையும் நன்கு அறிந்தவர். அதேபோல, இம்ரானின் அனைத்து இரகசியங்களையும் நன்கு அறிந்தவர். இவர் கைது செய்யப்பட்டிருப்பதுதான் இம்ரானுக்குச் சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.