பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. அக்கட்சியின் சித்தராமையா முதல்வராக இருக்கிறார். இந்தச் சூழலில், கடந்த மே மாதம் 9-ம் தேதி விஜயநகர மாவட்டம் ஹாரப்பனஹள்ளி பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தால் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை வாக்காளர்கள் இழக்க நேரிடும். மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் திட்டங்களை முடக்கும்” என்று கூறியிருந்தார். இதையடுத்து, நட்டாவின் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகக் கூறி தேர்தல் அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இப்புகார் தொடர்பாக நட்டா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மேற்படி வழக்கை தள்ளுபடிச் செய்யக்கோரி, நட்டா தரப்பில் கர்நாடாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கு கர்நாடாக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என். நாகபிரசன்னா, “தேர்தல் நடத்தை மீறப்பட்டதற்கான விவரங்களை மனுதாரர் தெளிவாக குறிப்பிடவில்லை. கண்மூடித்தனமான குற்றச்சாட்டின் அடிப்படையில் அலட்சியமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புகாரைக் குற்றவியல் விசாரணைக்கு அனுமதிப்பது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாக முடியும் ” என்று கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார் .