காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1962 போருக்கு முன்பும், பின்பும் இந்தியாவின் நிலப்பரப்பைச் சீனா கைப்பற்றியது நினைவிருக்கிறதா? என்று ராகுல் காந்திக்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன் பிறகு, முதல் முறையாக லடாக் யூனியன் பிரதேசத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த 18-ம் தேதி வருகை தந்தார்.
பாங்காங் ஏரிக்கு ராகுல் காந்தி இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “சீன துருப்புகள் காஷ்மீர் மாநில மக்களின் மேய்ச்சல் நிலத்தை கைப்பற்றுவதாக மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு அங்குல நிலத்தைக்கூட எடுக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். இது உண்மை இல்லை” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். “பாலகோட் மற்றும் உரி தாக்குதல்களுக்கு ஆதாரம் கேட்பவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்களிடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ராகுல் காந்தியின் பேச்சு இந்திய பாதுகாப்புப் படையினரின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இராணுத்தினரின் மன உறுதியை குலைக்காதீர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அதேசமயம், 1962 போருக்கு முன்பும் பின்பும், இந்தியாவின் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியது நினைவிருக்கிறதா என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.ஆண்டனி நாடாளுமன்றத்தில் பேசும்போது, எல்லை பகுதியில் உட்கட்டமைப்பை ஏற்படுத்தி சீனாவை எரிச்சலடைய வைக்க விரும்பவில்லை என்று கூறினார். இதுதான் உங்களது கடந்த கால வரலாறு.
ஆனால், தற்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் எல்லைப் பகுதிகளான லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பைப் பாருங்கள். எந்த சூழ்நிலையிலும் இராணுவ வாகனங்கள் துரிதமாக செயல்பட உதவும் வகையில் இருக்கின்றன” என்று ராகுல் காந்திக்கு ரவிசங்கர் பதிலடி கொடுத்திருக்கிறார்.