நாடு முழுவதும் உள்ள மதரஸாக்களில் மாணவர்கள் சேர்க்கையில் போலியாக கணக்குக் காட்டி, 144.83 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது அம்பலமாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்குச் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.
நாடு முழுவதும் இஸ்லாமிய மதக் கல்வியைப் போதிக்கும் மதரஸாக்கள் உள்ளிட்ட 1.80 லட்சம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களுக்குச் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மூலம் மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை குறித்த பதிவுகள் கடந்த 2016-ம் ஆண்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. இதன் பிறகு, நடத்தப்பட்ட ஆய்வில் கல்வி உதவித்தொகையில் மோசடி நடப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
அதாவது, 21 மாநிலங்களில் 8 கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்ட உதவித்தொகை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, நாட்டில் உள்ள 1,572 கல்வி நிறுவனங்களில் சுமார் 830 கல்வி நிறுவனங்கள் போலியானது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவற்றில் கடந்த 5 ஆண்டுகளில் 144.83 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையில் ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், மொத்தமுள்ள 1.80 லட்சம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில், 53 சதவீத நிறுவனங்கள் போலியானவை என்பது அம்பலமாகி இருக்கிறது.
இதையடுத்து, 2022-ம் ஆண்டு சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ஸ்மிருதி இரானி, மிகப்பெரிய அளவிலான விசாரணைக்கு உத்தரவிட்டார். இதற்காக, தேசியப் பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலை சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் நியமித்தது. இந்தக் குழு போலி நிறுவனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்தியது. அப்போது, ஒரே செல்போன் எண்ணில் 22 பேரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல, கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள மதரஸாவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 8 லட்சம் பேர் கல்வி உதவித்தொகை பெற்றதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. இது தவிர, அஸ்ஸாம் மாநிலத்தில் நாகோன் வங்கிக் கிளையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஒரே நேரத்தில் 66,000 கணக்குகள் தொடங்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும், காஷ்மீரின் அனந்த்நாக்கில் உள்ள கல்லூரியில் மொத்தம் 5,000 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் நிலையில், 7,000 மாணவர்களுக்கு மோசடியாக கல்வி உதவித்தொகை பெறப்பட்டது அம்பலமானது.
இதைத் தொடர்ந்து, 830 போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியது. மேலும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மதரஸாக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு இதுவரை சுமார் 22,000 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கி உள்ளது. இதில், கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 2,239 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள 12 லட்சம் வங்கிக் கிளைகளில் உள்ள ஒவ்வொரு கிளையிலும் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை பணம் செல்கிறது. அதேசமயம், நாட்டிலுள்ள 1.80 லட்சம் மதரஸாக்களில் 27,000 மதரஸாக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த உதவித்தொகை சிறுபான்மை சமுதாய மாணவர்களுக்கு முதல் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை வழங்கப்படுகிறது. இதன் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் 4000 முதல் 25000 ரூபாய் வரை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.