நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-3’ விண்கலத்தை ரூ.615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அதன் பின்னர், புவி சுற்றுவட்டப் பாதையில் பூமியை சுற்றி வந்த ‘சந்திரயான்-3’ ஆகஸ்டு 1-ந் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. 5 நாள் பயணத்துக்குப் பிறகு ஆகஸ்டு 5-ந் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் ‘சந்திரயான்-3’ நுழைந்தது.
அதன்பிறகு, நிலவைச் சென்றடைய சுற்றுப்பாதையின் தூரம் 4 முறை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு அருகே ‘சந்திரயான்-3’ கொண்டு வரப்பட்டது. கடந்த 17-ந் தேதி நிலவின் தரையில் இருந்து 153 கி.மீ. உயரத்தில் ‘சந்திரயான்-3’ விண்கலம் இருந்தபோது, அதில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது.
அதன்பிறகு, உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை நிலவை ஒட்டிய சுற்றுவட்டப் பாதையில் வலம் வந்தன. இனி உந்துவிசை கலன் தொடர்ந்து நிலவை சுற்றியபடி அடுத்த சில மாதங்களுக்கு ஆய்வுப்பணியை மேற்கொள்கிறது.
லேண்டரின் சுற்றுவட்டப் பாதையின் தூரத்தை குறைத்து, நிலவில் அதை தரையிறக்குவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக, திரவ வாயு எந்திரம் இயக்கத்தின் மூலம், நிலவின் தரையில் இருந்து 113 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டர் கருவி கடந்த 18-ந் தேதி கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து 2-வது கட்டமாக லேண்டர் கருவியின் சுற்றுவட்டப் பாதையின் தூரம் நேற்று முன்தினம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. தற்போது, நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக வந்துள்ள லேண்டர், குறைந்தபட்சம் 25 கி.மீ. தூரத்திலும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவிலும் சுற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், திடீரென லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான நேரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதாவது, 23-ந் தேதி மாலை 5.45 மணிக்கு பதிலாக 19 நிமிடங்கள் தாமதமாக, மாலை 6.04 மணிக்கு தரையிறக்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
Here are the images of
Lunar far side area
captured by the
Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC).This camera that assists in locating a safe landing area — without boulders or deep trenches — during the descent is developed by ISRO… pic.twitter.com/rwWhrNFhHB
— ISRO (@isro) August 21, 2023
இதையடுத்து சந்திரயான் 3 லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
லேண்டர் கருவி நிலவில் தரையிறங்கும்போது அங்குள்ள சூழல், இடர்பாடுகளை கண்டறிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை லேண்டர் படம் பிடித்து அனுப்பி உள்ளது.