டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், மத்திய நீர்வளப் பொறியியல் சேவை அதிகாரிகள் இன்று (21.08.2023) குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,
வாழ்க்கைக்கு தண்ணீர் அடிப்படைத் தேவை என்றும், நீர் மேலாண்மை என்பது அனைத்துத் தலைமுறையினருக்கும் ஒரு முக்கியமான சவாலானப் பணியாகும். பொறியியல் தீர்வுகளின் மூலமாக நீர்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய நீர்வளப் பொறியியல் சேவை அதிகாரிகளின் பங்களிப்பு முக்கியமானது. நீர் தொடர்பான நெருக்கடிகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதிலும் இந்த அதிகாரிகளின் சேவை முக்கியமானது.
நீர் வளங்களின் மேம்பாடு மற்றும் நீரை திறம்பட மேலாண்மை செய்வது ஆகியவை நீர் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான அம்சங்கள். பொருளாதார மேம்பாடு மற்றும் அதிகரித்து வரும் நகரமயமாக்கல் சூழலில் இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்கனவே நீர்வளம் பாதிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளைக் கொண்ட நமது நாடு வெவ்வேறு நில மற்றும் பருவநிலைத் தன்மைகளைக் கொண்டுள்ளது.
தற்போதுள்ள சவால்கள் மற்றும் புதிதாக ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள ஒரு முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றுவதில் மத்திய நீர்வளப் பொறியியல் சேவை அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். நீர் ஆதாரங்களின் மேம்பாடு மற்றும் மேலாண்மை தொடர்பான நடைமுறைகளில் மேலும் அதிகக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.