மத்திய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலமாகப் பங்கேற்று புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
மத்தியப் பிரதேசத்தின் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்காக தேர்வாகி உள்ள 5,500 ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். கடந்த 3 ஆண்டுகளில் மத்தியப் பிரதேச ஆசிரியர் பணிக்கு சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிதி ஆயோக் அறிக்கை படி, கடந்த 5 ஆண்டுகளில் வறுமைக் கோட்டின் கீழ் இருந்து, 13.5 கோடி மக்கள் விடுபட்டிருக்கிறார்கள்.
வருமான வரி தாக்கலை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை, கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் சராசரி வருவாய் உயர்ந்திருப்பதாகக் கூறுகிறது. 2014-ல் ரூ.4 லட்சமாக இருந்த சராசரி ஆண்டு வருவாய், 2023-ல் ரூ.13 லட்சமாக உயர்ந்திருக்கிறது. குறைந்த வருவாய் பிரிவில் இருந்து உயர் வருவாய் பிரிவுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
2014-க்கு முன், ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் பாடம் நடத்தாமல் அவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வந்தது. பிராந்திய மொழிகளில் உள்ள பாடப்புத்தகங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
2014ம் ஆண்டுக்கு முன்பெல்லாம் நடந்த ஊழல்களை மக்களால் மறக்க முடியாது. மக்கள் வரி செலுத்த முன் வருகிறார்கள். மக்கள் அதிகம் பேர் வரி செலுத்துவதற்கான காரணம், வரி பணம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது, இது மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்த அதிக வாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று கூறினார்.