பாகிஸ்தானில் 2 புதிய மசோதாக்கள், குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வி கையெழுத்திட்ட பிறகு சட்டங்களாக நிறைவேற்றப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், ஆல்வியோ நான் கையெழுத்திடவில்லை என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தானில் உத்தியோகப்பூர்வ இரகசியங்கள் திருத்த மசோதா மற்றும் பாகிஸ்தான் இராணுவம் திருத்த மசோதா 2023 ஆகியவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன. இதன் பிறகு, அம்மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வா ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டு விட்டதாகவும், அவை சட்டமாக்கப்பட்டு விட்டதாகவும் பாகிஸ்தான் நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகின.
ஆனால், தான் கையெழுத்திடவில்லை என்று குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வா மறுப்புத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஆரிப் ஆல்வா வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “கடவுள் எனது சாட்சியாக இருப்பதால், இந்தச் சட்டங்களுடன் நான் உடன்படாததால், அதிகாரப்பூர்வ இரகசியத் திருத்த மசோதா 2023 மற்றும் பாகிஸ்தான் இராணுவத் திருத்த மசோதா 2023 ஆகியவற்றில் நான் கையெழுத்திடவில்லை.
கையொப்பமிடப்படாத மசோதாக்களை செயலற்றதாக்க, குறிப்பிட்ட காலத்திற்குள் கையொப்பமிடாமல் திருப்பி அனுப்புமாறு எனது ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டேன். எனினும், எனது பணியாட்கள் எனது விருப்பத்தையும் கட்டளையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதை இன்று கண்டுகொண்டேன்.அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் போல் என்னை மன்னிப்பான். ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு குடியரசுத் தலைவரின் கையெழுத்தையே ஊழியர்கள் போட்டிருக்கும் சம்பவம் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கக் கூடியது என்று ஊடகங்கள் எள்ளிநகையாடி வருகின்றன.