ஜார்கண்ட் மாநில நிதியமைச்சர் ராமேஷ்வர் ஓரான் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில், சுரங்கத்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரிச் சுரங்க உரிமத்தை தனக்குத் தானே ஒதுக்கிக் கொண்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஒருமுறை கூட அவர் ஆஜராகவில்லை. அதேசமயம், முடிந்தால் தன்னை கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விட்டு வருகிறார்.
இந்த நிலையில்தான், அம்மாநிலத்தின் நிதியமைச்சராக இருக்கும் ராமேஷ்வர் ஓரானின் மகன் ரோஹித் ஓரானுக்குச் சொந்தமான ராஞ்சி, தும்கா, தியோகார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மதுபானக் கடைகள் உரிமம் ஒதுக்கியதில் நடந்த பண மோசடி வழக்கு தொடர்பாக இச்சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.