தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேரருவி பகுதி அருகே உள்ள தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 20 தற்காலிக கடைகள் தீயில் எரிந்து சாம்பலானது.
குற்றாலத்தில், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில் சார்பில் தற்காலிக கடைகள் ஏலம் விடப்படுவது வழக்கம். அந்த வகையில், குறிப்பிட்ட இடத்தில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு, விளையாட்டுப் பொருட்கள், ரெடிமேட் துணிக்கடை, பழக்கடை, மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு பொருட்களைச் சிறு சிறு கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்திலும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடும் வெயில் வாட்டியது. இதனால், அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகையும் மிகச் சொற்ப அளவிலேயே இருந்தது.
இந்த நிலையில், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டப் பகுதிகளில் இருந்து தீடீர் தீ விபத்து நிகழ்ந்தது. தீ மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால், சுமார் 20-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாது. மேலும், திரும்பிய திசை எங்கும் கரும்புகை காணப்பட்டது. விண்ணை முட்டும் அளவு அந்தப் பகுதியே புகை மண்டலமானது இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் எடுத்தனர்.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி மற்றும் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது எனக் கூறப்படுகிறது. மேலும், தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளில், அக்கம் பக்கத்து பகுதி மக்கள் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்காலிக கடையில் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதாக முதல்கட்ட தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.