திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நோயாளிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
செங்கம் அரசு மருத்துவமனையில், சுமார் 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டது. இதனால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி கொஞ்ச நாள் கூட நீடிக்கவில்லை. காரணம், மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததே காரணம்.
இந்த நிலையில், இன்று காலை அரசு பள்ளிக்கு சென்ற மாணவி ஒருவர் திடீரென விபத்தில் சிக்கினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் ஒரு மணி நேரமாக காத்திருந்தும் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் சிகிச்சை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
செங்கம் அரசு மருத்துவமனையில் குறைந்தபட்சம் 13 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் தற்போது 6 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால் அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் போதுமான மருத்துவர்கள் உள்ளதாக கூறியுள்ள நிலையில், செங்கம் மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள் இல்லாதது நோயாளிகளைக் கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இதனால், சுகாதாரத்துறை அமைச்சர் செங்கம் அரசு மருத்துவமனையை நேரில் வந்து ஆய்வு செய்து, கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.