வரும் 30-ம் தேதி வரும் பௌர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, தென்னக ரயில்வே சிறப்பு ரயில் இயக்க உள்ளது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், ஒவ்வொரு பௌர்ணமியின் போதும், தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து, கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், ஆவணி பௌர்ணமி வரும் 30-ம் தேதி வருகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தென்னக ரயில்வே நிர்வாகம், திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
அதன்படி, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில் (06127), ஆகஸ்ட் 30-ம் தேதி வேலூரில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் கனியம்பாடி, கன்னமங்கலம், ஆரணி, போளூா், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடைகிறது.
மறுமாா்க்கமாக, திருவண்ணாமலையிருந்து வேலூருக்கு முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில் (06128) ஆகஸ்ட் 31 -ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்குப் புறப்படுகிறது. இந்த ரயில், துரிஞ்சாபுரம், அகரம் சிப்பந்தி, போளூா், ஆரணி, கன்னமங்கலம், கனியம்பாடி வழியாக வேலூருக்கு அதிகாலை 5.35 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரயில்கள் சென்னை கடற்கரை சாலை வரை நீட்டிக்கப்பட்டு சென்னை கடற்கரை சாலை – வேலூா் – சென்னை கடற்கரை (0603 – 06034) ரயில்களாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.