தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டுக்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானி, இசைக்கலைஞர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த “பிரிக்ஸ்” மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்தார். இம்மாநாட்டை முடித்துக் கொண்டு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது, அந்நாட்டின் அதிபர் கத்ரினா சகெல்லரோபவுலு, பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸையும் சந்தித்தார். இன்று காலை இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸில் சில பிரபலங்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானியும், கேலக்டிக் எனர்ஜி வென்சர்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநருமான சியாபுலேலா சூசாவை பிரதமர் மோடி ஜோகன்னஸ்பர்க்கில் சந்தித்திருக்கிறார். அப்போது, சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு, சூசா வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், எரிசக்தியின் எதிர்காலம் மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவது தொடர்பான விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்திருக்கிறார்கள்.
அதேபோல, கிரீஸ் சென்ற பிரதமர் மோடி, கிரேக்க ஆராய்ச்சியாளரும், இசைக்கலைஞரும், இந்தியாவின் சிறந்த நண்பருமான கான்ஸ்டான்டினோஸ் கலைட்ஸிஸை ஏதென்ஸில் சந்தித்திருக்கிறார். கான்ஸ்டான்டினோஸ் இந்தியா மீது கொண்டுள்ள அன்பையும், இந்திய இசை மற்றும் நடனத்தின் மீதான அவரது ஆர்வத்தையும் பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், கிரேக்கத்தில் இந்தியக் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர். தவிர, தமது மனதின் குரல் வானொலி உரையின் 95-வது நிகழ்ச்சியின் போது கான்ஸ்டான்டினோஸ் பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரதமர் மோடி கிரீஸில் உள்ள இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸையும் ஏதென்ஸில் சந்தித்தார். அப்போது, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். இச்சந்திப்பின்போது கிரீஸில் இஸ்கான் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறப்பட்டது. அதேபோல, ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய கல்வியியல், சமஸ்கிருதம் மற்றும் இந்தி பேராசிரியரான டிமிட்ரியோஸ் வசிலியாடிஸ் மற்றும் ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் சமூக இறையியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அப்போஸ்தலோஸ் மிகைலிடிஸ் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது, இந்திய மதங்கள், தத்துவம் மற்றும் கலாச்சாரம் குறித்த தங்கள் பணிகள் குறித்து இருவரும் பிரதமரிடம் விளக்கினர். இந்திய மற்றும் கிரேக்க பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இந்திய – கிரேக்க கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதங்களில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.