விண்வெளித் துறைக்கு பிரதமர் மோடி புதிய உத்வேகத்தையும், ஆற்றலையும் கொடுத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
இராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்துக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், சமீபத்தில் நடந்த அம்மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான இராஜேந்திர குதா, சிவப்புக் கலர் டைரி ஒன்றை சபையில் காட்டினார்.
மேலும், அந்த டைரியில் முதல்வர் அசோக் கெலாட்டின் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றிருப்பதாக சபையிலேயே பகிரங்கமாகத் தெரிவித்தார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இது ஒருபுறம் இருக்க, முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கங்காபூரில் நடந்த சஹ்கர் கிசான் சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளித் துறைக்கு புதிய உத்வேகத்தையும், புதிய ஆற்றலையும் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் விண்வெளித் துறை புதிய வளர்ச்சியை அடையும்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சிவப்பு நிற டைரியைக் கண்டு பயப்படுகிறார். அவர் ஏன் பயப்படுகிறார் தெரியுமா? அந்த டைரியில்தான் அவர் செய்த கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் குறித்த விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. அசோக் கெலாட்டிடம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு அவமானமாக இருந்தால் ராஜினாமா செய்யுங்கள் கெலாட்” என்று கூறியிருக்கிறார்.