மாநில சட்ட ஒழுங்கு தொடர்பாகத் தான் அனுப்பிய கடிதங்களுக்குப் பதிலளிக்க தவறினால், மாநில அரசைக் கலைக்கப் பரிந்துரை செய்வேன் என பஞ்சாப் ஆளுநர் எச்சரித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் உள்ளார். அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த்சிங் மான் முதல்வராக இருந்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் இந்த கடிதத்திற்கும், இதற்கு முன்பு அனுப்பிய கடிதங்களுக்கும் மாநில அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தான் அனுப்பிய கடிதங்களுக்கு மாநில அரசு பதில் அளிக்கவில்லை என்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எச்சரித்துள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், என் கடிதங்களுக்கு மாநில அரசு பதிலளிக்கவில்லை என்றால், அரசு எந்திரம் தோல்வியடைந்ததாகக் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி, சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கவும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ன் படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்வேன் என்று கூறியுள்ளார். அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன். எனவே, சட்டத்திற்கு உட்பட்டு நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். எனது கடிதங்களுக்குப் பதிலளிக்கவும் கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியுள்ளார். மேலும் பதில் அளிக்கத் தவறினால், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.