பஞ்சாப்பில் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் 45-வது ரோஜ்கர் மேளாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 57,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்குகிறார்.
10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் “ரோஜ்கர் மேளா” எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழாவை கடந்தாண்டு அக்டோபர் 22-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த வேலைவாய்ப்பு திருவிழாவின் மூலம், மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்கள் வருவாய்த்துறை, நிதி சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத்துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இந்த ரோஜ்கர் மேளா நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 44 இடங்களில் நடந்திருக்கிறது. இவற்றின் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 28-ம் தேதி 45-வது ரோஜ்கர் மேளா பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், 57,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படவிருக்கிறது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்துகொண்டு, வேலைவாய்ப்பு ஆணைகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றுகிறார்.