அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி, புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா அத்துமீறி உள்ளது.
இந்தியா – சீனா இடையே கடந்த 1962-ம் ஆண்டு யுத்தத்தின்போது கணிசமானப் பகுதிகளை ஆக்கிரமித்த சீனா, அப்பகுதிக்கு அக்ஷாய் சின் என்று பெயர் சூட்டியது. அதேபோல, அருணாச்சலப் பிரதேசம் தங்களது நிலப்பகுதி என்றும், அது தெற்கு திபெத் என்றும் சீனா அழைத்து வருகிறது. ஆனால், இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இதன் பிறகும், அண்டை நாடானா சீனா, நமது நாட்டின் எல்லையில் அடிக்கடி குடைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2020-ம் ஆண்டு லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறு நுழைந்து நமது இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், லடாக் எல்லையில் நமது இராணுவம் கூடுதல் படைகளை குவித்திருக்கிறது.
இதையடுத்து, இரு நாட்டு நல்லுறவு குறித்து சீனாவிடம் இந்திய தரப்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட சீன அதிபரிடம் ஜி ஜின் பிங்கிடம் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மை குறித்து இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், சீனா அடங்குவதாக இல்லை. இந்த நிலையில்தான், சீனா புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த வரைபடத்தில், சீனா ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை அக்ஷாய் சின் என்றும், அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதில், இந்திய நிலப்பகுதி மட்டுமல்லாது தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் சீனா தங்களுடைய பகுதி என்று உரிமை கோரி இருக்கிறது. மேலும், சீனா தென் சீனக் கடலில் பெரும் பகுதியை தனது நிலம் என்று கூறியிருக்கிறது.
ஏற்கெனவே, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இதேபோல ஒரு வரைபடத்தை சீனா வெளியிட்டது. அதிலும், அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகள் தங்களுடைய நிலம் என்று சீனா குறிப்பிட்டிருந்தது. இதை தங்களது நாட்டு மக்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான தீவுகளை தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா குறிப்பிட்டிருந்தது. இதற்கு மேற்கண்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.