இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் நள்ளிரவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் சக்தி வாய்ந்த அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியுள்ளது. பூகம்பத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திலிருந்து வடக்கே 201 கிலோ மீட்டர் தொலைவிலும், பூமின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோ மீட்டர் கீழேயும் இருந்ததாகவும் நில அதிர்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களால் உணரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்தோனேசியாவின் மேற்கு நுசா, தெங்கரா, பங்சல் அருகே நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அடியில் 525 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு மிகவும் ஆழமாக ஏற்பட்டதன் காரணமாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல், அந்தமான் நிகோபர் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4.3 பதிவானதாகவும் கூறியுள்ளது.