ICC ODI உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளநிலையில், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் T20 தொடருக்காக டர்பனில் பயிற்சி மேற்கொண்ட போது மேக்ஸ்வெல்லின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
மேக்ஸ்வெல் தனது கணுக்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய தேர்வாளர் டோனி டோட்மைட், “போட்டிக்குத் தயாராகும் வீரர்கள் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், 34 வயதான மேக்ஸ்வெல்லின் உடற்தகுதிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும்” கூறியுள்ளார்.
இந்நிலையில், மேத்தியூ வேட் மாற்று வீரராக செயல்படுவார் என்றும் அறிவித்துள்ள ஆஸ்திரேலிய வாரியம் மேக்ஸ்வெல் எப்போது குணமடைவார்? என்பதை மருத்துவ முடிவுகள் தான் தெரிவிக்கும் என கூறியுள்ளது.
அதற்கு முன்பாக சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், மிட்சேல் ஸ்டார்க் ஆகிய 2 முக்கிய வீரர்கள் ஏற்கனவே காயத்தைச் சந்தித்ததால், தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் விளையாடமாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்திருந்தது.
அதே போலவே கேப்டன் பட் கமின்ஸும் ஆஷஸ் தொடரில் காயத்தால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் தற்போது மேக்ஸ்வெல் காயமடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த 4 வீரர்களுமே உலகக் கோப்பையை வெல்வதற்கு இன்றியமையாதவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
இருப்பினும் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்காமல் காயத்திலிருந்து குணமடையும் அவர்கள் அடுத்ததாக நடைபெறும் இந்திய ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அத்தொடரில் அந்த 4 வீரர்களும் முழு உடற்தகுதியுடன் களமிறங்கி உலகக்கோப்பைக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா இரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.