ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பயனாளிகளுக்குப் பாரதப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
பாரதப் பிரதமராக நரேந்திர மோடி 2014-ல் பதவியேற்றார். அந்தாண்டு சுதந்திர தின உரையின்போது, ஜன்தன் யோஜனா திட்டம் (அனைவருக்கும் வங்கிக் கணக்கு) தொடங்கப்படும் என்று அறிவித்தார். இத்திட்டம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்தின் மூலம் 50 கோடிக்கும் மேற்பட்டோர், வங்கிக் கணக்கு தொடங்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதையொட்டி, ஜன்தன் திட்டப் பயனாளிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், இத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்தவர்களையும் பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார்.
As we mark 9 years of PM Jan Dhan Yojana, I congratulate all those who benefitted from this scheme and laud everyone who worked to make it a success. It is a milestone effort in empowering our people. Through this initiative, we have brought millions into the financial… https://t.co/dNm8IwfVWg
— Narendra Modi (@narendramodi) August 28, 2023
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், “பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் 9 ஆண்டுகள் நிறைவை நாம் கொண்டாடும் இந்த நேரத்தில், இத்திட்டத்தால் பயனடைந்த அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதை வெற்றிகரமாக்க உழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன். எமது மக்களுக்கு அதிகாரமளிப்பதில் இது ஒரு மைல்கல் முயற்சியாகும். இந்த முன்முயற்சியின் மூலம், நாங்கள் கோடிக்கணக்கானவர்களை நிதி நீரோட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறோம். நமது வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் சரியான இடம் இருப்பதை உறுதி செய்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.