மதுரை இரயில் தீ விபத்து தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக, தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த 23-ம் தேதி, மதுரை இரயில் நிலையம் அருகே சுற்றுலா இரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி வரும் தென்னக இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி, 2-வது நாளாக இன்று,தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி, இரயில் தீ விபத்து தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் தொடர்புடைய மேலும் சிலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.
பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனைச் செய்யவில்லை என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கு, இரயில் பெட்டியில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தியதுதான் முக்கியக் காரணம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இரயில் பெட்டியில் தீ விபத்துத் தொடர்பாக, உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பேசின் டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றார்.