காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் 58 லட்சத்து 51 ஆயிரத்து 470 ரூபாய் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மகாசக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயில் தமிழக இந்துச் சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனைப் பல்வேறு வகைகளில் செலுத்துகின்றனர். குறிப்பாக, தங்கம், வெள்ளிப் பொருட்கள், பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றைக் காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர்.
இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கையானது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு பலத்த பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இரு உண்டியல்களும் திறக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிர்வாகிகள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியினைப் பார்வையிட்டனர்.
இதில், ரொக்கமாக 58 லட்சத்து 51 ஆயிரத்து 470 ரூபாயும்,190 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களும், 460 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களும் காணிக்கையாகக் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.